×

யு.பி.எஸ்.சி தேர்வில் மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றி கேள்வி!: முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம்..!!

கொல்கத்தா: மத்திய போலீஸ் படை பணிகளுக்கான தேர்வில் மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றி கேள்வி கேட்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யு.பி.எஸ்.சி தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி மத்திய ஆயுதப்படை, துணை ராணுவப் படை பணிகளுக்கான தேர்வை நடத்தியது. இதில், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்தும், டெல்லியில் ஏற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர் நெருக்கடி குறித்த வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது, மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் ஏழுதும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்  அமைப்புகளின் குரலாக  எதிரேலிக்கும் இந்த கேள்விகள் அதிக மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டிருப்பதற்கு யு.பி.எஸ்.சி பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னணி அமைப்பாக மாறிவருகிறதா என சிந்திக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிகழ்வு அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யு.பி.எஸ்.சி தேர்வில் மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றி கேள்வி கேட்கப்பட்டதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்த மம்தா பானர்ஜி, மத்திய போலீஸ் படை பணிகளுக்காக யு.பி.எஸ்.சி நடத்திய தேர்வில் மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றிய கேள்வி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றி 200 வார்த்தைகளுக்கும் மிகாமல் எழுத வேண்டும் என அதில் கேட்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி தன்னாட்சி அதிகாரம் உடையது. ஆனால் இப்பொது மத்திய பாஜக அரசின் ஊது குழலாக செயல்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை சீரழிப்பதே மத்திய பாஜக அரசின் நோக்கமாக உள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.


Tags : West Bengal ,UPSC ,Chief Minister ,Mamata Banerjee , UPSC Exam, West Bengal Election Violence, Mamata Banerjee
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி