×

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.75 கோடி நிலம் அபகரிப்பு பாளையங்கோட்டை சார்பதிவாளர் மீது 4வது வழக்கு: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

சென்னை: பாளையங்கோட்டை சார் பதிவாளராக ஒரே இடத்தில் பல வருடங்களாக பணியாற்றி வருபவர் சண்முகசுந்தரம். இவர் மீது அடுக்கடுக்கான புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலி நகர நில அபகரிப்பு காவல்துறையினரால் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.  சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் சங்கர் என்பவருக்கு சொந்தமான 83 சென்ட் நிலம், நெல்லையில் உள்ளது. இதன் மதிப்பு 4.75 கோடி. சில மாதங்களுக்கு முன்னர் இந்த சொத்தினை தனக்கு கிரையம் செய்து கொடுக்குமாறு வினு என்பவர் அணுகினார். ஆனால் சொத்தினை விற்க சங்கர் மறுத்துவிட்டார். ஆனால் ₹4.75 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்கும் எண்ணத்துடன் வினோ என்பவர் சார் பதிவாளர் சண்முகசுந்தரத்தை அணுகி உள்ளார். இருவரும் சேர்ந்து கேரள மாநிலத்தில் பாறசாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் 1976ம் ஆண்டு தங்களுக்கு வேண்டிய சுப்பிரமணியம் என்பவர் கிரையம் பெற்றதாக ஒரு போலியான ஆவணத்தை தயார் செய்து அதற்குரிய குறிப்பாணையை சார்பதிவாளர் தயாரித்துள்ளார்.

 இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் மற்றும் குறிப்பாணையை அடிப்படையாக வைத்து, சுப்பிரமணியம் வசந்த் என்பவரது பெயருக்கு செட்டில்மென்ட் ஆவணத்தை எழுதி கடந்த பிப்ரவரி மாதம் பாளையங்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் சண்முகசுந்தரம் பதிவு செய்து கொடுத்துவிட்டார். இத்தகைய மோசடி ஆவண பதிவு தொடர்பாக உடனடியாக ஆவணத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சண்முக சுந்தரத்தை சொத்தின் உறுப்பினர்களான சங்கர் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது பாறசாலையில் ஏதோ ஆவணம் பதிவு செய்துள்ளதாக மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.   இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பாறசாலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது இவர்களது சொத்துக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத அடமான ஆவணமாக பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவண எண்ணில் சார்புபதிவாளர் சேர்ந்து போலியாக ஒருவரது பெயருக்கு ஆவணத்தை தயாரித்து இவர்களே குறிப்பையும் தயாரித்து அதே பாளையங்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் அட்டவணை செய்துள்ளது தெரியவந்தது. இதனை குறிப்பிட்டு திருநெல்வேலி காவல்துறை ஆணையரிடம் சங்கர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் சார்பதிவாளர் சண்முகசுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  பாளையங்கோட்டை சார்பதிவாளராக பணிபுரியும் சண்முகசுந்தரம் போலி ஆவணங்கள் தயாரித்து தனது அலுவலகத்திலேயே போலி நபர்களை வைத்து பதிவு செய்து கொடுத்து லஞ்சம் பெறுவது இது முதல் முறை அல்ல என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் பல்வேறு சொத்துக்களை போலியாக பதிவு செய்தது ஆள் மாறாட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மூன்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. சார்பதிவாளர் மீது தற்போது 4வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பதிவுத்துறை அதிகாரிகள் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்த்து வருகின்றனர். என்னதான் புதிய பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தனது சாட்டையை சுழற்றி சார்பதிவாளர்களையும் பத்திர பதிவு துறை அதிகாரிகளையும் வேலை வாங்கினாலும் இன்னும் பழைய அரசுக்கு விசுவாசமாகவும் அப்போது இருந்ததை போலவே தொடர்ந்து மோசடியிலும் ஈடுபடும் இதுபோன்ற சார்பதிவாளர்களை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும் என்று நேர்மையான அதிகாரிகள் விரும்புகின்றனர். தொடர்ந்து 4 எப்ஐஆர் சார்பதிவாளர் மேல் பதிவு செய்யப்பட்ட பின்பும் எந்தவித நடவடிக்கையும் இன்றி அதே அலுவலகத்தில்  பணியாற்ற இவரை அனுமதிப்பது பதிவுத்துறைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்கின்றனர் அதிகாரிகள்.

அமைச்சர் முன்னிலையில் சான்று
பாளையங்கோட்டை சார்பதிவாளர் சண்முகசுந்தரம், பதிவுத்துறையில் உள்ள ஒரு உயர் அதிகாரிக்கு வேண்டியவர் என்று கூறப்படுகிறது. நெல்லையில் சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தபோது, இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை மறைத்து, இவர் நேர்மையானவர், திறமையானவர் என்று ஒரு அதிகாரி பாராட்டியுள்ளார். ஏனெனில், அந்த துறையின் உயர் அதிகாரியின் பெற்றோர் நெல்லையில் வசித்து வந்தனர். அவர்களுக்குத் தேவையானவற்றை இவர்தான் செய்து வந்தார். இதற்காகத்தான் அமைச்சர் முன்னிலையில் பாராட்டியுள்ளார். 3 எப்ஐஆர் உள்ள ஒருவரை அமைச்சர் முன்னிலையில் அதிகாரி பாராட்டியது, நேர்மையான அதிகாரிகளை தலைகுனிய வைத்துவிட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Palayankottai , Forged documents, produced, Rs 4.75 crore, embezzlement, case
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!