×

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத்தினறாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு ரயில் நிலையம் சென்னைக்கு அடுத்தபடியாக, முக்கியமான ரயில் நிலைய சந்திப்பாக உள்ளது. இங்கிருந்து சென்னை, தென் மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி மற்றும் வட மாநிலங்களுக்கு பல ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலைய சந்திப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் நகரும் படிகட்டுகள் இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர் என பலரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலைய சந்திப்பில் நகரும் படிக்கட்டுகள், லிப்ட் அமைக்க வேண்டும். சிறப்பு ரயில்களில் நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிள் பெட்டிகளை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். பிளாட்பார கட்டணம் ₹50 என்பதை கைவிட வேண்டும்.

ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு  அடிப்படை வசதிகளான கழிப்பறை, சக்கர நாற்காலி, வாகன நிறுத்தம் ஆகியவை செய்து தரவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு மானியத்தில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் வி.முனுசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ப.பாரதி அண்ணா, மாவட்ட செயலாளர் வி.அரிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பி.பாலாஜி, நிர்வாகிகள் எஸ்.தாட்சாயினி,  அருள்ராணி, எம்.வள்ளிகண்ணன், என்.அன்பு உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் ரயில் நிலைய அலுவலரிடம், கோரிக்கை மனுக்களை வழங்கினர்.


Tags : Chengalpattu Railway Station , Alternative Talents Demonstration at Chengalpattu Railway Station
× RELATED செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சிசிடிவி கேமரா பொருத்த கோரிக்கை