×

வடுவூர் அருகே நாட்டுக்கோழிகளை தாக்கிய கம்பரோ நோய்-கட்டுக்குள் கொண்டு வந்த மருத்துவக்குழு

மன்னார்குடி : நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறப்பு அம்சம் அதன் நோய் மேலாண்மை ஆகும். ஏனெனில் பெரும்பாலான நாட்டுக் கோழி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவம் கிடையாது. நோய் கண்ட நிறைய கோழிகள் இறந்துவிடும். ஆனால் சிறப்பான நோய் மேலாண்மை செய்து தடுப்பூசி செய்வதன் மூலம் வருமுன் காக்க இயலும்.இந்நிலையில், வடுவூர் வடபாதி கிராமத்தில் உள்ள பண்ணை ஒன்றில் கோழிகள் சோர்வாகவும் இருந்து வருவதாகவும், ஒரு சில நாட்டுக்கோழிகள் இறந்து விட்டதாகவும் வேளாண்மை அறிவியல் நிலையம் மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அறிவியல் நிலைய மருத்துவத்துறை விஞ்ஞானி டாக்டர் சபாபதி தலைமையில் வடுவூர் அரசு கால்நடை மருத்துவர் உள்ளடக்கிய மருத்துவர் குழு அப்பண்ணையை மேற்பார்வையிட்டு இறந்த நாட்டுக்கோழிகளை தனியே எடுத்து உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இது குறித்து கால்நடை அறிவியல்துறை உதவிப்பேராசிரியர் டாக்டர் சபாபதி கூறியது: இப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ஐபிடி அல்லது கம்பரோ எனும் நச்சுயிரி நோய் பாதித்துள்ளது. இந்நோய் கோழி நோய் எதிர்ப்பு சக்திக்கு மூலமான பர்ஷா பெப்ரிசஸ் எனும் உறுப்பினை தாக்கி அழிப்பதோடு அதன் நோய் எதிர்ப்பு சக்தியை இல்லாமல் செய்துவிடும். இதனால் மற்ற எல்லா நோய்களுக்கும் வழிவகுத்து கோழிகள் உடல் நிலை சரியில்லாமல் பாதிப்புக்குள்ளாகி இறந்துவிடும்.

இதற்கான அறிகுறிகளாவன சோர்வாக இருத்தல், காய்ச்சல், வயிற்றுப் போக்கு, இறகுகள் உடைந்து உதிர்தல் மற்றும் இறப்பு வீதம் 20 முதல் 30 சதம் வரை இருக்கும். நோய்க்கிருமிகளின் வீரியத்தைப் பொறுத்து ஒரு சில பண்ணைகளில் 60லிருந்து 90 சதம் வரை கூட இறப்பு வீதம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு கிருமியின் வீரியத்தன்மை மிக முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். அந்த விவசாயி கோழிகளுக்கு போதுமான அளவு தடுப்பு ஊசி மருந்து செலுத்தி இருந்தாலும் அவரது பண்ணையில் எவ்வாறு இந்த நோய் வந்தது மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறு நோய் வருவதை தடுப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு அவரது உயிர் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்நோய் தடுப்பு மருந்துகளும் கோழிகளை ஊக்கமாக வைத்து இருக்க விட்டமின் டானிக் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க இயற்கை மருத்துவ முறைகளும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது இப்பண்ணையில் கோழிகள் அனைத்தும் பரிபூரணமாக குணமாகி நலமாக நல்ல நிலையில் இருப்பதாக இப்பண்ணை உரிமையாளர் ரவி கூறினார்.

Tags : Vaduvoor , Mannargudi: A special feature of turkey breeding is its disease management. Because most country chickens are involved
× RELATED வடுவூரில் ஆலோசனை கூட்டம் நீர்நிலை...