×

பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே திடக்கழிவு மேலாண்மை திட்ட தொழிலாளர்கள் தர்ணா-அதிகாரி சமரசம்

நெமிலி : பனப்பாக்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம், அதிகாரி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
நெமிலி அடுத்த பனப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தரம்பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த பணியில் 26 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணி தற்காலிகமாக கடந்த 6 மாதத்திற்கு முன் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே வேலை செய்த 26 பேரும் தனியாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு வேலை செய்து வருகின்றனர். மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை, தனியார் நிறுவன மேற்பார்வையாளர் ஐயப்பன் என்பவர் அடிக்கடி தரக்குறைவாக பேசி வருகிறாராம். இதனால் தொழிலாளர்கள் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த மேற்பார்வையாளர் ஐயப்பன், தொழிலாளர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ‘நான் சொல்வதை மட்டுமே கேட்கவேண்டும். இல்லாவிட்டால் வெளியே சென்றுவிடுங்கள்’ எனக்கூறி தொழிலாளர்களை வெளியே அனுப்பிவிட்டு திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கை பூட்டிவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் பேரூராட்சி அலுவலகம் எதிரே திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களை தரக்குறைவாக பேசியதை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பனப்பாக்கம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சொக்கலிங்கம், சம்பவ இடத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, மேற்பாவையாளர் ஐயப்பனை பணிநீக்கம் செய்து வேறு ஒருவரை நியமிப்பதாக உறுதியளித்தார். இதனையேற்று அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு, மதியம் 1 மணியளவில் பணிக்கு சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Panappakkam ,Municipality Office , Nemili: Solid Waste Management Project staff in Panappakkam Municipality to the workers involved in the sudden strike, the officer reconciled
× RELATED எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் தினவிழா