×

ஹெலிகாப்டர் சகோதரர்கள் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை!: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

தஞ்சை: ஹெலிகாப்டர் சகோதரர்கள் எந்த மோசடியில் ஈடுபடவில்லை என  பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். சகோதரர்களான இவர்கள், கும்பகோணத்தில் நிதி நிறுவனமும், கும்பகோணத்தை அடுத்த கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் வைத்து நடத்தி வந்தனர். சகோதரர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர். இதன் மூலம் கும்பகோணம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்கள், வியாபாரிகள், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

சகோதரர்கள் இருவரும் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக தெரிகிறது. பின்னர் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி முதலீடு செய்தவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்த தொழிலதிபர் பைரோஸ் பானு மற்றும் அவரது கணவர் ஜபருல்லா ஆகியோர் ஹெலிகாப்டர் சகோதரர்களின் நிறுவனத்தில் 15 கோடி ரூபாய் முதலீடு செய்தும் தங்களுக்குரிய பங்குத்தொகை கிடைக்கவில்லை என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, ஹெலிகாப்டர் சகோதரர்கள் எந்த மோசடியிலும் ஈடபடவில்லை என்று தெரிவித்துள்ளார். கும்பகோணம் தொழிலதிபர் அளித்த புகாரில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவர் பொய் வழக்குகள் போட்டு பல நபர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்று ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.

மேலும் தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் தராததால் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். இதனிடையே ஹெலிகாப்டர் சகோதரர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும், அவர்கள் மீதான மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்றும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Tags : BJP ,H.Raja , Helicopter brothers, fraud, H. Raja
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...