×

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து பப்ஜி மதன் உயர்நீதிமன்றத்தில் மனு: நாளை விசாரணை

சென்னை,: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.  மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மதன் மீதுவழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜூன் 18ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூலை 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

  இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், எனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம்  ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பப்ஜி விளையாடுவது ஒருபோதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது. என்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து போலீஸ் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டுதான்.  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் எனக்கு முறையாக வழங்கப்படவில்லை. எனவே, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags : Pabji Madan ,Court , Opposing the arrest under the Anti-Threat Act Babji Madan Petition in High Court: Trial tomorrow
× RELATED லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது