×

காஞ்சிபுரம் அருகே பரபரப்பு: தனியார் ரசாயன ஆலையில் வெளியேறிய நச்சு புகை: கிராம மக்களுக்கு மூச்சு திணறல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சின்ன ஐயன்சத்திரம் அடுத்த சிங்கடிவாக்கம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. சிங்கடிவாக்கம் அரசு பள்ளி அருகே கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக  தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை இயங்குகிறது. இந்த தொழிற்சாலையில், கடந்த 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால், ரசாயன கழிவுகள் வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர். இதுகுறித்து, தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ரசாயன ஆலையை ஒட்டி உள்ள அரசு பள்ளியில் நேற்று மதியம் மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருந்தது. அப்போது, ஆலையில் இருந்து திடீரென, வெளியேறிய புகையால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும், சுற்று வட்டாரத்தில் இருந்த மக்களுக்கும் இந்த பாதிப்புக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  உடனே, இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கிராம மக்கள், தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சென்னை கிண்டி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து 10 பேர் கொண்ட அதிகாரிகள், அதிநவீன கருவிகளுடன் அங்கு சென்றனர். அப்பகுதியில் காற்றில் கலந்துள்ள மாசு குறித்து  ஆய்வு நேற்று நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில் காற்றில் மாசு கலந்து உள்ளதா, இல்லையா என்பது தெரியும் என அதிகாரிகள் கூறினர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


Tags : Kansipura , Kanchipuram, Chemical Plant
× RELATED கனமழை காரணமாக செங்கல்பட்டு,...