×

வருமான வரி சட்டத்தை திருத்தியது ஒன்றிய அரசு: வெளிநாட்டு நிறுவனங்கள் விற்கும் பங்குகளுக்கு இனி வரி கிடையாது: கெய்ர்ன், வோடபோன் பஞ்சாயத்துக்கு தீர்வு: வசூலித்த 8,100 கோடியை திருப்பி தர முடிவு

புதுடெல்லி: இந்தியாவில் கைமாற்றப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் விற்கும் பங்குகளுக்கு வருமான வரி வசூலிக்கும் நடைமுறைக்கு ஒன்றிய அரசு முடிவு கட்டி உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான கெய்ர்ன், கடந்த 2006-07ம் நிதியாண்டில் தனது தாய் நிறுவனமான கெய்ர்ன் பிஎல்சி.க்கு 10 சதவீத பங்குகளை மாற்றியது. மூலதனம் மூலம் கிடைத்த ஆதாயத்துக்கு வரி செலுத்துமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அந்நிறுவனம். ரூ.10,247 கோடி வரி செலுத்த வேண்டுமென ஒன்றிய அரசு கூறியது. மேலும், ரூ.8 ஆயிரம் கோடி வரியும் வசூலித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெய்ர்ன் நிறுவனம், சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், இந்திய அரசு இந்த தொகையை திருப்பி தராவிட்டால், அதற்கு சொந்தமான சொத்துக்களை கெய்ர்ன் நிறுவனம் முடக்கலாம் என சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி ரூ.8,760 கோடி வரி மற்றும் அபராதத்தை வசூலிக்க அமெரிக்காவில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் சொத்துக்களை முடக்க அமெரிக்க நீதிமன்றத்திலும், பாரீசில் உள்ள 20 இந்திய சொத்துக்களை முடக்க பிரான்ஸ் நீதிமன்றத்திலும் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடுத்தது.

இதே போல், வோடபோன் நிறுவனம் உட்பட 17 நிறுவனங்கள் ஒன்றிய அரசின் வரி விதிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளன. இதுபோன்ற இரட்டை வரிவிதிப்பு கூடாது என கடந்த 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், 2012ம் ஆண்டுக்கு முன்பு நடந்த பங்கு விற்பனைக்கும் வரி வசூலிக்கும் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு முன்தேதியிட்டு இயற்றியது. இந்த காரணங்களால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வர தயங்குவதாக தற்போதைய பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு கருதியது. எனவே, பங்கு விற்பனை விதிக்கப்படும் வரியை நீக்கும் வகையில், 2012ம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரி திருத்த சட்டத்தை ரத்து செய்வதற்கான புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், இனி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் விற்கும் பங்குகளுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.  மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுடனான அரசின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கெய்ர்ன் நிறுவனத்திற்கு ரூ.8,100 கோடியை ஒன்றிய அரசு திருப்பித்தர உள்ளது.

மக்களவையில் நிறைவேறியது
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான வருமான வரி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நேற்று கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ‘முதலீட்டாளர்களின் உணர்வுகளுக்கு மோசமான சட்டம்’ என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இந்த சட்டம் விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும் என ஒன்றிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags : the United States ,Cairn ,Vodafone Panchayat Settlement , Income Tax Act, United States
× RELATED 2024ன் முதல் குளிர்காலப் புயல்:...