×

ஆர்.கே.பேட்டை அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால் அரசு பணிகள் முடக்கம்: மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால் அரசு அலுவல பணிகள் முடங்கியுள்ளன. மேலும், மாணவ - மாணவியர், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் எஸ்.வி.ஜி.புரம் எஸ்.வி.ஜி.புரம் கிராமம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில், நியாய விலை கடை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மலை சார்ந்த பகுதியில் இக்கிராமம் உள்ளதால், செல் டவர் இல்லாததால், சிக்னல் கிடைக்காமல் கிராமமக்கள் அவசர காலத்திலும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் உள்ளிட்ட அவசர சேவைகள் பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர்.

மேலும், அரசு அலுவலகம், பள்ளி, ரேஷன் கடை உட்பட அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெட்வொர்க் வசதி இன்றி உரிய நேரத்தில் பணிகள் செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வருவாய் சார்ந்த பணிகளுக்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செல்லும் பொதுமக்கள் மனுக்கள்  கணினியில் பதிவேற்றம் செய்யவும் ஆன்லைன் மனுக்கள் ஆய்வு செய்ய முடியாத நிலையில் கிராம நிர்வாக அலுவலர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், பள்ளியில் ஆசிரியர், மாணவர் பதிவேடு உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளை கல்வி துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க முடியாமலும் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் கைரேகை வைத்தால் மட்டுமே வழங்க வேண்டிய நிலையுள்ளது.

அதனால், சிக்னல் இன்றி ரேஷன் கடை விற்பனையாளர் கடையில் இருந்து பொருட்களை சாலை பகுதிக்கு எடுத்து  கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்க முடியும் நிலையில் உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் பெற்றுச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி - கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள். செல்போன் சிக்னலுக்காக பொதுமக்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கிராமத்திற்கு வெளியிலும் மரங்கள் மீதும் கட்டிடங்கள் மீது ஏற வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் எஸ்.வி.ஜி.புரத்தில் செல் டவர் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags : RKpet , Near RKpet Freezing of government services due to non-availability of cell phone signal: Impact on students and the public
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...