கைதான போலி போலீஸ் கமிஷனருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், விவிஐபிகளுடன் தொடர்பு?... சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் அருகே கைதான போலி கமிஷனர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் விவிஐபிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரம் டோல்கேட்டில் போலி போலீஸ் கமிஷனராக வலம் வந்த சென்னை கொளத்தூர் ஜீவா நகரை சேர்ந்த விஜயன்(42) என்பவரை நேற்று முன்தினம் பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து போலீசார் கூறியதாவது: விஜயன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்த தொழிலில் நஷ்டம் ஆனதால், வேறு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இவரது மனைவி கொளத்தூரில் பிளே ஸ்கூல் நடத்தி வருகிறார். ஆனால் இவர் வீட்டில் வேலை இல்லாமல் இருந்ததால் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்று இவரது மனதில் தோன்றியுள்ளது. ஆனால் சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர் மனைவியிடம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, டிஎஸ்பி ஆனதாக பொய் சொல்லியுள்ளார். மேலும் தான் தற்போது போலீஸ் கமிஷனராக உள்ளதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார். இதனை நம்ப வைப்பதற்காக விஜயன், கோவையில் இவரது குடும்ப நண்பரான ஜெயமீனாட்சி என்பவரின் பெயரில் ஜீப் வாங்கியுள்ளார்.

இதை போலீஸ் வாகனம் போல ரூ.2 லட்சம் செலவில் மாற்றியுள்ளார். இந்த ஜீப்பை எடுத்து கொண்டு அடிக்கடி விசாரணைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வெளியூர் சென்று விடுவார். பிறகு வீட்டில் வந்து 10 நாட்கள் ஓய்வு எடுப்பார். பின்னர் திரும்பவும் இதுபோல் விசாரணை என்ற பெயரில் பல ஊர்கள் சுற்றி வந்துள்ளார். தற்போது போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டார். முக்கியமாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கைதான விஜயன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் அவர் போலீஸ் உடையில் போஸ் கொடுக்கும் புகைப்படமும் சிக்கியுள்ளது.

அதன்படி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி மற்றும் சில போலீஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. போலீஸ் கமிஷனர் என்று சொல்லி, பண மோசடியில் ஈடுபட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

More
>