வேப்பனஹள்ளி அருகே அலகு குத்தி 40 அடி கிரேனில் தொங்கிய பக்தர் விழுந்து காயம்

வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட எட்ரப்பள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக சின்னகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (36) உள்பட 4 பேர், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் விமான அலகு (முதுகில் அலகு குத்திக்கொண்டு) குத்தி ராட்சத கிரேனில், 40 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியவாறு கோயிலுக்கு வந்தனர். மேட்டுப்பாளையம் என்னுமிடத்தில் கிரேன் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முதுகில் குத்தியிருந்த கொக்கி சதையை கிழித்ததால் ஆகாஷ் சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில், அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால், மற்ற மூவரும் கீழே இறங்கி, நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பரவவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: