மெரினா காமராஜர்-சிவானந்தம் சாலை சந்திப்பில் 75வது சுதந்திரதின நினைவு தூண் அமைக்கும் பணி தொடங்கியது: 15 அடி உயரத்தில், 10 அடி அகலத்தில் அமைகிறது

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினம், வைர விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே, காமராஜர்-சிவானந்தா சாலை சந்திப்பில் ஒரு இடமும், அண்ணா சாலையில் ஒரு இடமும், ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டன. இந்த 4 இடங்களில் ஒரு இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் காமராஜர் சாலை மற்றும் சிவானந்தா சாலை சந்திப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தார். இப்பணிகளை மேற்கொள்ள வசதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1.83 கோடி பொதுப்பணித்துறையின் பராமரிப்பு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இப்பணிக்காக சென்னை மண்டல கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி கடந்த 26ம் தேதி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டார். இப்பணிக்கு குறுகிய கால டெண்டர் அடிப்படையில் விடப்பட்டன. இந்த டெண்டரில் கலந்துகொள்ள விண்ணப்பித்த பிஎஸ்கே கன்ஸ்ட்ரக்‌ஷன் என்கிற கட்டுமான நிறுவனத்தை கடந்த 31ம் தேதி பொதுப்பணித்துறை தேர்வு செய்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் காமராஜர் சாலை மற்றும் சிவானந்தா சாலை சந்திப்பில் நினைவுத்தூண் அமைக்கும் பணியை நேற்று பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது. 15 அடி உயரத்தில் 10 அடி அகலத்தில் நினைவுத்தூண் அமைக்கப்படுகிறது. நினைவுத்தூண் மேற்பகுதியில் அசோக சக்கரம் வைக்கப்படுகிறது. இப்பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: