×

இருவாரங்கள் முடங்கிய நிலையில் மீண்டும் கூடியது நாடாளுமன்றம்!: பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கிய எதிர்க்கட்சிகள்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது முதல் இரு அவைகளும் 9 நாட்கள் முழுமையாக முடங்கியுள்ளன. பெகாசஸ் உளவு விவகாரம், விவசாயிகள் பிரச்னை, தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களவையில் இன்றைய அலுவல்களை ஒத்துவைத்துவிட்டு பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதேபோல் மாநிலங்களவை ஒத்திவைத்து பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் எம்.பி.இளமாறன் கரீம் நோட்டீஸ் அளித்துள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்ததாவது, நாடாளுமன்றம் முடங்குவதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

தங்கள் மீது குற்றம்சாட்டப்படுவதை அரசு விரும்பவில்லை. பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிப்பது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கவுரவம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர். விவாதத்துக்கு தயார் என  அரசு கூறினாலும் நடத்த மறுக்கிறது என்று தெரிவித்தார். இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே அலுவலகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.


Tags : Parliament ,Pegasus , Parliament, Pegasus, Notices, Oppositions
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...