×

ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னையில் மீண்டும் காற்றுமாசுபாடு அதிகரிப்பு: கட்டுப்படுத்தும் பணியில் அரசு தீவிரம்

சென்னை: தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 2.84 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் அதிகப்படியான வாகனங்கள் சென்னையில் தான் இயங்கி வருகிறது. இதேபோல் லடசக்கணக்கான தொழிற்சாலைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் காற்று மாசுபாடு, மற்ற பகுதிகளை விட சற்று அதிகமாகவே இருக்கிறது.  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவது கட்டுப்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகளும் இயங்கவில்லை.

அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. இதனால் சம்பந்தப்பட்ட காலக்கட்டத்தில் சென்னையில் காற்று மாசுபாடு குறைந்திருந்தது. அதாவது கடந்த மே மாதம் 30ம் தேதி நிலவரப்படி பிஎம்-2.5 அளவு 22.83 ஆக இருந்தது. இதேபோல் பி.எம்-10 அளவு 44.66 ஆக இருந்தது.  பிறகு தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஜூன் மாதம் முதல் அதிகப்படியான தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. தொழிற்சாலைகளும் செயல்பட தொடங்கிவிட்டன. இதன்காரணமாக சென்னையில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரிக்க தொடங்கியது. அதன்படி கடந்த ஜூலை 30ம் தேதி நிலவரப்படி பி.எம்-2.5 அளவு 34.09 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பி.எம்-10ன் அளவு உயர்ந்து 68.17 ஆக இருக்கிறது.  

இதேபோல் வரும் நாட்களில் காற்று மாசுபாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், அதைக்கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.குறிப்பாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிக அளவு காற்று மாசுபாடு உள்ள பகுதிகளை கண்டறிந்து, கூடுதல் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : Chennai , Curfew relaxation, air pollution, government intensification
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...