3வது அலை வந்தால் சமாளிக்க நெல்லை அரசு மருத்துவமனையில் 3 ஆக்சிஜன் உற்பத்தி பிளாண்டுகள்: 3 ஆயிரத்து 500 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கலாம்

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 ஆக்சிஜன் உற்பத்தி பிளாண்டுகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் 3 ஆயிரத்து 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இருப்பில் வைக்க முடியும். கொரோனா 3வது அலை வந்தால் சமாளிக்கும் வகையில் இந்த முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் பரவிய கொரோனா முதல் அலை, செப்டம்பர் வரை நீடித்தது. தொடர்ந்து கடந்த மார்ச், ஏப்ரலில் 2ம் அலை ஏற்பட்டது. மே மாதம் உச்சம் பெற்ற தொற்று பரவலால் அரசு மற்றும் கொரோனா கேர் சென்டர்கள் நிரம்பி வழிந்தன. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் பலர் அவதிப்பட்டனர்.

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவியது. தொற்றின் வீரியத்தால் மே மாதம் உயிரிழப்புகளும் அதிகரித்தன. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிகபட்சமாக நாள்தோறும் 7 டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. மருத்துவமனையில் உள்ள 3 கலன்களில் நிரப்பப்படும் ஆக்சிஜன் உடனுக்குடன் காலியானது. இந்த பற்றாக்குறையை போக்க ஸ்டெர்லைடிலும், இஸ்ரோவிலும் உற்பத்தி செய்ப்பட்ட ஆக்சிஜன் பெறப்பட்டது. மே மாத இறுதியில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததால் ஆக்சிஜன் தேவையும் குறைந்தது.

இந்நிலையில் கொரோ னா 3வது அலை வந்தால், அதனை சமாளிக்கும் வகையில் முன்னேற்பாடாக ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் தயாரிக்கும் 3 பிளாண்டுகள் அமைக்கப்படுகின்றன. மத்திய அரசு உதவியுடன் ஒரு பிளான்டும், மாநில அரசு உதவியுடன் 2 பிளாண்டுகளும் அமைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் 2 ஆயிரம் லிட்டர், 750 லிட்டர், 600 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் உடையவை.

அதிகபட்சம் 3 ஆயிரத்து 500 லிட்டர் வரை காற்றின் மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இருப்பில் வைக்க முடியும். இதற்காக தருவிக்கப்பட்ட கலன்களை 3 வெவ்வேறு இடங்களில் நிலைநிறுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆக.15ம் தேதிக்கு முன்பாக இந்த கலன்களை நிறுவி பரிசோதிக்கப்படும். சுதந்திர தினத்தன்று இவற்றை பயன்பாட்டிற்கு ெகாண்டு வர மருத்துவமனை நிர்வாகம்  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Related Stories: