×

காலிறுதிக்கு முன்னேறி இந்தியா சாதனை: வந்தனா ‘ஹாட்ரிக்’

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்த இந்திய அணி, ஒரு ஆட்டத்திலாவது ஆறுதல் வெற்றி பெறுமா என எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பதிவு செய்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து அணிகளிடம் படுதோல்வி அடைந்தது. இதனால், எஞ்சிய 2 ஆட்டங்களில் வென்றாலும், அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளின் வெற்றி/தோல்வியை பொறுத்தே இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில்  அயர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. எனினுன், வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடனே நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது.  

ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா அசத்தலாக கோலடித்து அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்காவின்  தரின் கிறிஸ்டி  ஒரு கோல் அடித்தார். முதல் குவார்ட்டர் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. 2வது குவார்ட்டரில் வந்தனா 17வது நிமிடத்திலும், தென் ஆப்ரிக்காவின் எரின் ஹன்ட்டர்  30வது நிமிடத்திலும்  கோல் போட்டனர். அதனால் 2-2 என இழுபறி நீடித்தது. 3வது கால்பகுதியில் இந்தியாவின் நேஹா 32வது நிமிடத்திலும் தென் ஆப்ரிக்காவின் மரிஜென் 39வது நிமிடத்திலும் கோல் அடிக்க 3-3 என சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடைசி குவார்ட்டரில் இரு அணிகளும் மல்லுக்கட்டின. பரபரப்பான ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் வந்தனா ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து சாதனை படைத்தார். ஆட்ட நேர முடிவில் இந்தியா 4-3 என்ற  கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்தியா 6 புள்ளிகள் பெற்று காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தாலும், அயர்லாந்து - இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவு தான் அதை உறுதி செய்வதாக இருந்தது. அயர்லாந்து வென்றால், அதிக கோல் வித்தியாசம் காரணமாக முன்னேறிவிடும். இங்கிலாந்து வெற்றி அல்லது குறைந்தபட்சம் டிரா செய்தால் மட்டுமே இந்தியா முன்னேறலாம் என்ற நிலையில், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற... இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறியது.

* ஆஸி.யுடன் மோதல்
ஏ பிரிவில் முதல் 4 இடங்களை பிடித்த  நெதர்லாந்து (15), ஜெர்மனி (12), இங்கிலாந்து (9), இந்தியா (6) காலிறுதிக்குள் நுழைந்தன. பி பிரிவில் ஆஸ்திரேலியா (15), ஸ்பெயின் (9), அர்ஜென்டினா (9), நியூசிலாந்து (6) அணிகள்  காலிறுதிக்கு தகுதி பெற்றன. இரண்டு பிரிவுகளிலும் முறையே கடைசி 2 இடங்களை பிடித்த அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா, சீனா, ஜப்பான் அணிகள் போட்டியில் இருந்து வெளியறேின. நாளை நடைபெறும் காலிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வென்று அசத்தியுள்ளது.

Tags : India ,Vandana , India advance to quarterfinals: Vandana hat-trick
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...