டெல்லி: இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். சுனில் சேத்ரி ஆந்திர மாநிலம் செகண்ட்ராபாதில் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் தந்தை கே.பி.சேத்ரி. இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேலை செய்தவர். அவரது அம்மா சுசிலா சேத்ரி நேபாளத்தை சேர்ந்தவர். சேத்ரிக்கு கிரிக்கெட் தான் பிடித்தமான விளையாட்டு. சச்சின்தான் அவருக்கு பிடித்த வீரர். அதனால் அவரும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பி தன் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரை அணுகியுள்ளார். “கிரிக்கெட் கிட் கொண்டு வந்தால் பயிற்சி கொடுக்க தயார்” என சொல்லியுள்ளார் அந்த ஆசிரியர்.
ஆனால் கிரிக்கெட் கிட் வாங்க காசு இல்லாததால் எனது கிரிக்கெட் கனவை கலைத்து விட்டு கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தியாக சுனில் சேத்ரியே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இந்தியாவில் கால்பந்தாட்டம் என்றால் அதன் ஹீரோவாக கருத்தப்பட்டவர் பைசுங் பூட்டியா. அவருக்கு பின்பு இப்போது பலராலும் பெரிதும் அறியப்படுபவர் சுனில் சேத்ரி. இந்திய கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றதும், தன்னுடைய தனிப்பட்ட சாதனையாலும் தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனில் சேத்ரி. இந்நிலையில் ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் சுனில் சேத்ரி 94 கோல்களை அடித்துள்ளார். கால்பந்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறி சுனில் சேத்ரி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு 20 ஆண்டுகளாக தனது பங்களிப்பை அளித்து வந்த நிலையில் சுனில் சேத்ரி ஓய்வு அறிவித்துள்ளார். சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பால் இந்திய கால்பந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
The post இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.