×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:  ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இப்படி நியமிக்கப்படும் அலுவலர்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அனுபவம் உள்ளவராக இருப்பது நலம். அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்களாக இருக்க கூடாது.  அதன்படி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர் நிலைக்கு குறையாத, 5 முதல் 10 வரையிலான வார்டுகளுக்கு ஒரு அலுவலர் மூலம் நியமிக்கப்பட வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர், வருவாய் கோட்ட அலுவலர் நிலைக்கு குயைாத அலுவலராக இருக்க வேண்டும்.
 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர், வருவாய் கோட்ட அலுவலர் நிலைக்கு குறையாதவராக இருக்க வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் நியமிக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள் அலுவலகத்துக்கு இன்றைக்குள் (31ம் தேதி) தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kansipura ,Sengalupu ,Vetappuram ,State Electoral Commission , Kanchipuram, Chengalpattu, Villupuram, Rural Local Government Election, State Election Commission
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும்...