நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.40.72 லட்சத்தில் 1,500 பேருக்கும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.60.11 லட்சத்தில் 132 பேருக்கு நலத்திட்ட உதவி என மொத்தம் ரூ.1 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். தமிழக  ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, முன்னாள் முதல்வர் கலைஞர் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கினார். பின்னர் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின்போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இதுபோல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றியதன் மூலம், இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றார். இதில் எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆ.சண்பகராமன், (அமலாக்கம்) பா.லிங்கேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: