×

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.  திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தெளிவாக இல்லை. தனக்கு எதிராக குறிப்பிட்டு குற்றச்சாட்டுகள் ஏதும் கூறப்படவில்லை. தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன என்பதை தெரிந்துதான் தன்னுடன் உறவு கொண்டார்.

இதனால் இது பாலியல் வன்புணர்வு ஆகாது. கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவில்லை. நடிகையின் எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை. தனக்கு எதிரான புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய் என்று தெரிவித்துள்ளார்.  இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, மணிகண்டனிடம் பணம் பறிக்க முயன்ற போது அதற்கு இணங்காததால் நடிகை அவருக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரான மணிகண்டனின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அளிக்கப்பட்ட புகாரின்மீது பதிவு செய்யப்பட்ட  இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று  மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.

 வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததுடன் இந்த  மனுவுக்கு பதிலளிக்கும்படி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கும், நடிகை சாந்தினிக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Former minister ,Manikandan ,High Court , Case, Former Minister Manikandan, High Court
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்