×

வெளி மாவட்ட வணிகர்களின் மூட்டைகளை ஏற்றி வந்த 3 லாரிகள், 73 மெட்ரிக் டன் நெல் பறிமுதல்-மன்னார்குடியில் வருவாய் துறையினர் அதிரடி

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டத்தில் தற்போது 104 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையங்களில் அந்தந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் நெல்மணிகளை அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த சில வணிகர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் வெளியூர்களில் விளைந்த நெல்மணிகளை லாரிகளில் ஏற்றி வந்து திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.

இதுகுறித்து திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய் துறையினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் வருவாய் துறையினர் மன்னார்குடி காளவாய்க்கரை வடசேரி சாலை வழியாக நேற்று மாலை ரோந்து சென்ற போது அங்குள்ள தனியார் எடை மேடை நிலையம் அருகில் இரண்டு லாரிகள் பாரம் ஏற்றப்பட்ட நிலையில் சாலையோரத்தில் நிற்பதை கண்டனர்.

இதுகுறித்து லாரி டிரைவர்களிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதில் கூறியதால் சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரிகளில் சோதனை நடத்தினர். அதில் மதுரையில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி வந்து இங்குள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய திட்டமிட்டு 2 லாரிகளில் கொண்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் பிடிபட்ட நபர்கள் கொடுத்த தகவலின் பேரில் மன்னார்குடி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் புதுச்சேரியில் இருந்து நெல் முட்டைகளை ஏற்றிவந்த மற்றொரு லாரியையும் அதிகாரிகள் பிடித்தனர்.

பிடிபட்ட 3 லாரிகளில் சுமார் 73 மெடன் எடையுள்ள நெல்மணிகள் 1100 மூட்டைகளில் கட்டப்பட்டு கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பிடிபட்ட மூன்று லாரிகளை நெல் முட்டைகளுடன் பறிமுதல் செய்த வருவாய் துறையினர் மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள நவீன அரிசி ஆலை வளாகத்திற்கு கொண்டு சென்று பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Revenue Department ,Mannargudi , Mannargudi: Direct Paddy Procurement Centers by Tamil Nadu Consumer Goods Corporation at 104 places in Thiruvarur District at present.
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி