கொரோனா விதி மீறி ஆர்ப்பாட்டம் எடப்பாடி, ஓபிஎஸ் உட்பட அதிமுகவினர் மீது வழக்கு

சென்னை: கொரோனா விதி மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், தேனி எம்பி ரவீந்திரநாத் உட்பட ஆயிரக்கணக்கான அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது வீட்டின் முன்புள்ள ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்தார். அவருடன் 90 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அவர் மீது சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியில்லாமல் கூட்டம் கூடியது, அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதது, பேரிடர் காலத்தில் அரசின் விதிமுறைகளை மீறியது, தொற்று நோய் பரவுவதற்கு காரணமாக இருந்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாநிலங்களவை எம்பி சந்திரசேகரன், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 7,200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏ, தேனி மற்றும் பெரியகுளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் போலீசார் அனுமதி மறுத்த 14 இடங்களில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் உள்ளிட்ட 307 பேர் மீது தேனி மற்றும் போடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் என மாவட்டம் முழுவதும் 80 பெண்கள் உள்பட 963 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 299 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>