கூவம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 93 வீடுகள் இடித்து அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் கூவம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 93 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக கூவம் கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. ஆயிரக்கணக்கானோர் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்தனர். வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து, கூவம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அதிகாரிகள் அகற்றி, அங்கு வசித்தவர்களை மறு குடியமர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுப்பணிதுறை மற்றும் மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக,  கூவம் ஆற்றுப்படுக்கை உள்பட நீர்நிலைப்பகுதி ஓரங்களில் குடியிருப்போரை அகற்றி, மறுகுடியமர்வு செய்து வருகின்றனர். அதன்படி, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் அமைந்துள்ள கூவம் ஆற்றின் கரையோரம் பல ஆண்டாக வசித்து வந்த 93 குடும்பங்களை அங்கிருந்து அகற்றி, புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் மறு குடியமர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

 இதனையடுத்து, மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் அங்குள்ள குடும்பங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அமைந்தகரை 8வது மண்டல செயற்பொறியாளர் வைத்தியலிங்கம், பொதுப்பணிதுறை செயற்பொறியாளர் பாலகுமரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை, 93 குடும்பத்தினரை அங்கிருந்து வெளியேற்றினர்.  பின்னர், அங்கிருந்த   வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க அண்ணாநகர் உதவி ஆணையர் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: