மீனாட்சி கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்

*கற்களை ஆய்வு செய்து கலெக்டர் உத்தரவு

மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்காக கொண்டு வந்த கற்களை கலெக்டர் அனீஷ் சேகர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 2018, பிப். 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு கடைகள் மற்றும் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதனை புதுப்பிக்க அரசு ரூ.18.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

 வீர வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்க நாமக்கல் மாவட்டம், பட்டணம் கிராமத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன. இந்த கற்கள் மதுரை பெருங்குடி அருகே உள்ள மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த இடத்தில் வைத்து சிற்பிகள் மூலம் தூண்களாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த கற்களை நேற்று கலெக்டர் அனீஷ் சேகர் ஆய்வு செய்தார். பணிகளை விரைவில் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வின்போது கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதி வளாகத்தில் பூந்தோட்டம் மற்றும் பூக்கள், மரங்கள் வளர்க்கப்பட்டு, அதனை தனியார் நகை கடை அதிபர் ஒருவர் பராமரித்து வருகிறார். அந்த வளாகத்தில் விடுபட்ட பகுதிகளில் நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தலவிருட்சம் என்ற பெருமைக்குரிய ‘கடம்ப மரங்கள்’ நடப்பட்டன. மீனாட்சி கோயில் பக்தர்கள் கூறும்போது, ‘‘கடம்ப மரங்கள் கொண்ட காட்டினை அழித்தே மீனாட்சி கோயிலும், மதுரை நகரமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அவ்வகையில், மீனா ட்சி கோயிலின் தலவிருட்சமான கடம்ப மரங்கள் இப்போது நகருக்குள் இல்லை. கோயிலுக்குள் ஓரிடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே, மதுரையின் அடையாளப் பெருமைக்குரிய கடம்ப மரங்கள் வளர்ப்பதில் கோயில் நிர்வாகம் கூடுதல் கவனம் காட்டி, இந்த மரம் வளர்ப்பிற்கான பிரசாரத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்’’ என்றனர்.

Related Stories: