×

தகைசால் தமிழர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ‘தகைசால் தமிழர் விருது’க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தினவிழாக் கொண்டாட்டத்தின்போது அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்குவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரை தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார். இந்த விருதுக்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவ தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், இந்த ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. ‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

முதல்வர் நிவாரண நிதிக்கு விருது தொகை ரூ.10 லட்சத்தை வழங்குகிறார் சங்கரய்யா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையினை, கோவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன். சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன்.

Tags : Marxist ,N. Sankarayya , Thakaisal Tamil Award, Marxist Communist Senior Leader, N. Sankarayya Selection, Government of Tamil Nadu
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு