×

சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் ரூ.4 கோடி முறைகேடு: தணிக்கையில் பகீர் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது

சென்னை: யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில், ரூ.4 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில், கடந்த அதிமுக ஆட்சியின்போது பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் இந்த துறையின் ஆணையராக உள்ள கணேஷ், முறைகேடு புகார்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனால், இந்தக் கல்லூரியில் நடந்துள்ள புகார்கள் மற்றும் முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது நேற்று ஒரு நாள் நடந்த ஆய்வில் மட்டும் ரூ.4 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதில், இளநிலை படிப்பை முடித்து பணியில் சேர்ந்த மருத்துவர்களை, பணி மூப்பு அடிப்படையில் விதிமுறைகளுக்கு மாறாக முதுநிலை வகுப்புகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான பதவி உயர்வு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு மூலம் நிலுவைப் படியாக சில டாக்டர்களுக்கு பல லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகளுக்கு உணவு வழங்காமல் வழங்கியதுபோலவும், கருவிகள் வாங்கியது போலவும், தங்கள் விருப்பம்போல பணி நியமனம் மற்றும் மாணவர்களை சேர்த்ததில் முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அதோடு, பல மருத்துவர்கள் கொரோனாவை காரணம் காட்டி வெளியூருக்கு சென்று இருப்பதும், அவர்களுக்கு பல மாதங்கள் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், பலர் மாற்றப்பட்ட பிறகும், சென்னையில் அயல்பணி என்று காரணம் காட்டி வேலை செய்து வந்ததும், அவர்களும் பணிக்கு வராமல் சம்பளம் மட்டும் வாங்கியதும் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் மாணவர்கள் பலர் கல்லூரிக்கு வராமலும், பலர் தற்போது ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து புறக்கணித்தாலும் அவர்களுக்கு வருகை பதிவு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில்தான் அதிக அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தணிக்கை அறிக்கை கிடைத்தவுடன் கல்லூரி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai College of Yoga ,Naturopathy ,Pakir , Chennai College of Yoga and Naturopathy, abuse, censorship
× RELATED மிகக்குறைந்த கட்டணத்தில் தஞ்சாவூர்...