இடைத்தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகிய மாஜி அமைச்சர்: தெலங்கானாவில் பரபரப்பு

ஐதராபாத்: இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாஜகவில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைய உள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, தெலுங்கு தேசம் கட்சியின் மாநில அமைச்சராக பெட்டி ரெட்டி என்பவர் பதவி வகித்து வந்தார். இவர், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி 2019ல் பாஜகவில் சேர்ந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன், பாஜக மூத்த தலைவர் மோட்க்பள்ளி நரசிம்ஹுலு, அக்கட்சியில் இருந்து விலகினார். அதற்கடுத்ததாக தற்போது பாஜகவில் இருந்து பெட்டி ரெட்டி விலகியுள்ளார்.

இவர்கள் இருவரும் ஆளும் தெலங்கானா ராஷ்டிரா சமிதி (டிஆர்எஸ்) கட்சியில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சரான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ ராஜேந்தர், தனது பதவியை ராஜினாமா செய்ததால் ஹுசுராபாத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது அமைச்சர் பதவியை முதல்வர் சந்திரசேகர் ராவ் பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், ‘ஹுசுராபாத் இடைத்தேர்தலில் போட்டியிட பெட்டி ரெட்டி விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவருக்கு சீட் ஒதுக்க வாய்ப்பில்லை.

அந்த தொகுதியில் இருந்து வெற்றிப் பெற்று தற்போது ராஜினாமா செய்துள்ள ராஜேந்தர், பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. ராஜேந்திரை பாஜகவில் சேர்ப்பதற்கு பெட்டி ரெட்டி எதிர்த்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட ஆந்திராவில் ஹுசுராபாத்தில் இருமுறை போட்டியிட்டு வென்றேன். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையால், என்னால் பாஜகவில் தொடர்ந்து பணியாற்ற எனது மனசாட்சி ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>