×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுப்படுத்தும் பணிகள் 60 சதவீதம் நிறைவு

வேலூர் :   ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுப்படுத்தும் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோட்டை சீரமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு, நவீன வாகன நிறுத்துமிடம் அமைத்தல், மழைநீர் கால்வாய் அமைத்தல், புதிய, பழைய பஸ்நிலையங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை அகழி தூர்வாருதல், மின் விளக்கு, ஒலி, ஒளி அமைப்பு உள்ளிட்ட பணிக்காக ₹32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கோடை வளாகத்திற்கு நடைப்பாதையில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் கோட்டை அகழியில் 50 மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும்.

கோட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் 6 மீட்டர் உயரம் கொண்ட 98 அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நடைப்பாதையின் குறுக்கே உள்ள மின்கம்பத்தை மாற்றுவதற்கு மின்வாரியத்திற்கு பரிந்துரை கடிதம் மற்றும் பணம் செலுத்தப்பட்டது.

விரைவில் மின்கம்பம் மாற்றி அமைக்கப்படும். மேலும் கோட்டையை சுற்றி மின் விளக்குகள், இரவிலும் கோட்டை ஒளிரும் வகையில் மதில் சுவரில் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையில் 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.


Tags : Vellore Fort , Vellore, Smart City,Vellore Fort,Beautification works
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயில்