×

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி இறந்த குட்டியானையின் உடல் 2 நாட்களுக்கு பின் மீட்பு

*தாய் யானையின் பாசப்போராட்டத்தால் உருக்கம்

கூடலூர் :  கூடலூர் அருகே சேற்றில் சிக்கி இறந்த குட்டி யானையின் உடல் 2 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது செம்பாலா. இங்குள்ள தனியார் தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவு தேடி குட்டியுடன் ஒரு தாய் யானை உள்ளிட்ட 2 யானைகள் வந்தனர். பசியாறி விட்டு யானைகள் அங்குள்ள வனப்பகுதிக்கு புறப்பட்டன. துள்ளி குதித்து சென்ற குட்டியானை அங்குள்ள சேற்றில் சிக்கியது.

சேற்றில் சிக்கிய குட்டியானை வெளியே வரமுடியாமல் தவித்தது. இதைப்பார்த்த தாய் யானை உள்பட 2 யானைகளும் குட்டியை மீட்க முயன்றன. விடிய விடிய போராடியும் குட்டியானையை மீட்க முடியவில்லை. இதனால் தாய் கண் எதிரே சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. குட்டி யானை இறந்தது தெரியாமல் அங்கேயே 2 யானைகளும் முகாமிட்டு சுற்றி வந்தன. அடுத்த நாள் காலையில் யானைகள் சுற்றுவதை பார்த்தனர். அப்போது சேற்றில் சிக்கி குட்டி யானை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குட்டியானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினர். ஆனால் தாய் யானை உள்பட 2 யானைகளும் யாரையும் நெருங்கவிடாமல் அரண்போல் நின்றன. இதனால் அருகில் செல்ல முடியாமல் வனத்துறையினர் பின் வாங்கினர். 2 நாட்கள் தாய் யானை அங்கேயே முகாமிட்டு பாசப்போராட்டம் நடத்தியது. வனத்துறையினர் விரட்டியபோதும்  கொட்டும் மழையில் யானைகள், குட்டி யானையை விட்டு செல்வதாக தெரியவில்லை. இதனால் யானையின் உடலை மீட்பதில் சற்று தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை யானைகள் சற்று தூரமாக சென்றன.  யானைக்கு நுகர்வு தன்மை அதிகம். இதனால் குட்டியின் உடலில் இருந்த வீசிய துர்நாற்றத்தை வைத்து அது இறந்து விட்டதாக தெரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த  வனத்துறை கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனக்குழுவினர் யானை இறந்த பகுதிக்கு சென்று யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

கூடலூர் கோட்ட வன அலுவலர் ஓம்கரம், பயிற்சி வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர் கணேசன், வனவர் சுரேஷ்குமார், தொண்டு அமைப்பின் பிரதிநிதிகள் மதுசூதனன், தாசன் ஆகியோர் முன்னிலையில் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் குழுவினர் இறந்த குட்டி யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த யானை மூச்சுத் திணறி இறந்து இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்த குட்டி யானையின் முக்கிய உறுப்புக்கள் ரசாயன பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு யானையின் உடல் அப்பகுதியில் புதைக்கப்பட்டது.


Tags : Güdalur , Cuddalore,Small Elephant, Mother Elephant,Love
× RELATED கூடலூரில் 3வது நாளாக தொடரும் சம்பவம்:...