இன்று கார்கில் வெற்றி தின கொண்டாட்டம்; லடாக்கில் ஜனாதிபதி நிகழ்ச்சி ரத்து: மோசமான வானிலையால் திடீர் முடிவு

ஜம்மு: லடாக்கில் கார்கில் வெற்றி தினம் கொண்டாட ஜனாதிபதி அங்கு சென்ற நிலையில், மோசமான வானிலையில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சென்றுள்ளார். இதற்காக நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார். நேற்று மதியம் 11.15 மணியளவில் நகர் விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஆளுநர் மனோஜ் சின்ஹா, மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வருகிற 28ம் தேதி வரை காஷ்மீர், லடாக் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராம்நாத் கோவிந்த் இன்று லடாக்கின் திராஸ் பகுதிக்கு சென்று, கார்கில் போர் வெற்றி தினத்தில் அங்குள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக  கார்கில் போர் வெற்றி நினைவிடத்தில், பாதுகாப்புப் படைத் தலைவர் (சி.டி.எஸ்) ஜெனரல் பிபின் ராவத், லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர்.கே.மாத்தூர், லடாக் எம்பி ஜம்யாங் செரிங் நம்கியால் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, நாளை காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்று பேசுகிறார்.  அவரின் வருகையை முன்னிட்டு இரு யூனியன் பிரதேசங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கும் ஆளுநர் மாளிகை பகுதியை ராணுவத்தினரும், போலீசாரும் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

>