×

ஊட்டி, குந்தா பகுதிகளில் மழை தாக்கம் குறைந்தது

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக இம்மாதம் இரண்டாவது வாரத்தில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. சில நாட்கள் மழை குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து தென்மேற்கு பருவகாற்றின் தீவிரம் காரணமாக கடந்த 21ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்தது.

குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர்பவானி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. மழை காரணமாக ஊட்டி மற்றும் குந்தா சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்தன. இவை உடனுக்குடன் வெட்டி அகற்றப்பட்டன. ஒரிரு இடங்களில் லேசான மண்சரிவுகள் ஏற்பட்டன. இவையும் உடனுக்குடன் அகற்றப்பட்டது.

முத்தோரை பாலாடா, கோலனிமட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது. கடந்த 5 நாட்களில் 4 ஆயிரத்து 582 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக 23ம் தேதியன்று மட்டும் 1669 மி.மீ., மழை பதிவானது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் மட்டும் 493 மி.மீ., பதிவானது. மழை பாதிப்புகளை சமாளிக்கும் நோக்கில் அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவும் வரவழைக்கப்பட்டது. இதனிடையே மழை தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் காற்று மற்றும் மழையின் தாக்கம் குறைந்துள்ளது.

 ஊட்டி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பகல் நேரத்தில் வெயிலான காலநிலை நிலவியது. ஊட்டியில் மதியத்திற்கு பிறகு விட்டு விட்டு லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. அதே நேரம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை பொழிவு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 8 மணி நிலவரப்படி) நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீ.,ல்: ஊட்டி 3.8, நடுவட்டம் 17, குந்தா 3, அவலாஞ்சி 13, எமரால்டு 3, அப்பர்பவானி 10, குன்னூர் 2, கேத்தி 4, கூடலூர் 24, தேவாலா 31, ஒவேலி 13, பந்தலூர் 30 என மொத்தம் 258 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Tags : Ooty ,Kunda , Ooty: Ooty and Kunda areas in the Nilgiris have received less rainfall over the last two days.
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்