×

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே திடீர் டெல்லி பயணம்: பிரதமர் மோடியை இன்று சந்திக்கின்றனர்

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே திடீரென டெல்லிக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். இன்று அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகின்றனர். கடந்த 2019ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இடம் பெற்றது. பாஜவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதியிலும் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இந்த கூட்டணி சட்டப்பேரவை தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக தோல்வியுற்றது. திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

பாஜவை கூட்டணியில் சேர்த்ததால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளே வெளிப்படையாக குற்றம்சாட்டி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜவை கூட்டணியில் சேர்த்ததால் தான் அதிமுக இவ்வளவு இடங்களில் வெற்றி பெற முடிந்தது என பாஜவினர் கூறி வந்தனர். இதனால், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்து எழுந்துள்ளது. விரைவில் உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கான பணியில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமையை நியமிக்கும் வகையில் பொது செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவியை பிடிக்க ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே,சசிகலா அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதனால், அதிமுகவில் கடும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 10.50 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். ஓபிஎஸ்சுடன் அவருடைய மருமகன் காசி விஸ்வநாதன் மட்டும் சென்றார். அவரை தொடர்ந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று இரவு 9.30 மணியளவில் கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோரும் சென்றனர்.

இவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை 11.05 மணியளவில் பிரதர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளனர். ஆனால், ஒன்றாக பிரதமரை சந்திக்கின்றனரா அல்லது தனித்தனியாக சந்திக்கின்றனரா என தெரியவில்லை. இந்த சந்திப்பின் போது,  உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக  தெரிகிறது. தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடனும் இவர்கள் சந்தித்து பேச உள்ளதாக தெரிகிறது. ஓபிஎஸ் மகன் வீட்டில் பால்காய்ச்சல்: மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியில் அரசு சார்பில் தனி வீடு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டாக எம்பிக்களுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கப்படவில்லை. இதனால் எம்பிக்கள் டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.

இதே போல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி மக்களவை தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத்தும் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். தற்போது அவருக்கு டெல்லி நிர்மண் பவனில் உள்ள மீனா பவனில் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பால் காய்ச்சும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இதில் ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளார். அதனால் தான் பிரதமர் மோடியை சந்திக்கும் நிகழ்ச்சியின் போது, வீடு பால்காய்ச்சும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது,  உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிகிறது.

Tags : OBS ,EPS ,Delhi ,Modi , Legislature Election, OBS, EPS, Delhi Travel, Prime Minister Modi
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...