×

சென்னை முழுவதும் 73,545 போஸ்டர்கள் அகற்றம்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில்  உள்ள 15 மண்டலங்களில் நேற்று முன்தினம் வரை 73,545 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டுவது தொடருமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி  எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்க சென்னை  மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மைய தடுப்புகளில் செடிகள் நட்டு  அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.  இருப்பினும், பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள்,  தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்கள், சுவரொட்டிகளால் மாநகரின் அழகை  சீர்குலைத்து வருவதை கருத்தில் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி  வருகின்றனர்.

அதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நேற்று முன்தினம் வரை 73,545  ஆயிரம்  போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  குறிப்பாக, வடசென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 17,073 போஸ்டர்களும்,  மத்திய சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 20,047 போஸ்டர்களும், தென்  சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 36,425 போஸ்டர்களும்  அகற்றப்பட்டுள்ளது. அதேபோல் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் வடசென்னை பகுதியில் 1,599  போஸ்டர்களும், மத்திய சென்னையில் 1,998 போஸ்டர்களும், தென் சென்னையில் 721  போஸ்டர்கள் என மொத்தம் 4,318 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து போஸ்டர் ஒட்டப்படுவது தொடருமானால்  ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

தொடர்ந்து ஒட்டினால்கடும் நடவடிக்கை
சென்னை, அடையார் பகுதியில் அடர்வனம் உருவாக்கல் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டார். அப்போது சாலையோரம் உள்ள மரங்களில் விதிகளை மீறி ஆணி அடிப்பது, விளம்பர பலகைகள் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Chennai , Chennai, Posters, Corporation
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...