×

சட்டப்பேரவையில் கலைஞர் பட திறப்பு விழா சென்னை வரும் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: சட்டப் பேரவை வளாகத்தில் கலைஞர் பட திறப்பு விழாவிற்கு வருகைதரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் படம் சட்டப்பேரவை வளாகத்தில் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. கலைஞரின் புகைப்பட திறப்பு விழாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுத்தார். முதல்வரின் அழைப்பு ஏற்று ஆகஸ்ட் 2ம் தேதி குடியரசுத்தலைவர் சென்னை வருகிறார். அப்போது சட்டப்பேரவை வளாகத்தல் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார்.அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தமிழக காவல் துறை ஏற்பாடு செய்து வருகிறது.

திமுக தலைமையிலான அரசு அமைந்த பிறகு முதல் முறையாக குடியரசுத்தலைவர் சென்னை வருகிறார். இதனால் அவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு தொடர்பாக நேற்று தலைமை செயலாகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்ைன மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்பட உள்ள பாதுகாப்பு குறித்தும், சட்டப்பேரவையில் கலைஞர் புகைப்படம் திறந்து வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விமானம் நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் தலைமை செயலாகம் வரை குடியரசுத்தலைவர் வருகையின் போது 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குடியரசுத்தலைவர் கான்வாய் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags : Legislative Assembly ,President ,Chennai ,Chief Secretary , Legislature, Chennai, President, Chief Secretary, Consultative meeting
× RELATED எம்எல்ஏக்களின் அலுவலத்தை திறக்க...