×

திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை செயல்பாடு ஆன்மிக மக்களின் பொற்காலம்: அமைச்சர் சேகர் பாபு உறுதி

திருப்பூர்: திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு ஆன்மிக மக்களின் பொற்காலமாக இருக்கும் என அமைச்சர் சேகர் பாபு  தெரிவித்தார்.  திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள விசுவேசுவரசுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோயில்களில் நேற்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டி: முதல்வரின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் உள்ள கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெறும். கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்களின் குறைகளுக்கு தீர்வு காணவும், கோயில் நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாதவர்கள், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வருமானம் உள்ள கோயில், வருமானம் இல்லாத கோயில் என்ற நிலைகளை மாற்றி அனைத்து கோயில்களிலும் ஒருகால பூஜையாவது நடக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு ஆன்மிக மக்களின் பொற்காலமாக இருக்கும். தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 75 நாட்களில் தினமும் 2 இடங்கள் என இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கான இடங்களை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணி சிறிய கோயில் முதல் படிப்படியாக நடந்து வருகிறது. அவை 100 நாட்களில் முழுமையாக செயல்படுத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Minister ,Segar Babu , DMK rule, Department of Hindu Charities, Golden Age of Spiritual People, Minister Sekar Babu
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...