×

கோயில் யானைகளை இயற்கை சூழலில் வைக்க கோரி பொதுநல வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில் யானைகளை பெரிய அளவிலான பகுதியில் இயற்கை சூழலில் வைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 34 கோயில் யானைகள் உள்ளன. மதுரை அழகர் கோயில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில் மற்றும் பவானி சங்கமேஸ்வரர் கோயில் யானைகள் அதிகாரிகளின் கவனக்குறைவால் பலியாகியுள்ளன. கோயில் யானைகள் சிறிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

சிமென்ட் மற்றும் கான்கிரீட் தரை அந்த அறைகளில் உள்ளதால் கால்களில் தொற்று பாதித்து யானைகள் பலியாகி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு யானை சரியான முறையில் கவனிக்காததால் பலியாகின்றன. குறிப்பாக குறைந்த வயதுடைய அதாவது 16 மற்றும் 20 வயதுடைய யானைகள் பலியாகின்றன. போதுமான சத்துள்ள உணவு தராமல் ஒரே மாதிரியான உணவு யானைகளுக்கு தரப்படுவதால் அவை மிகவும் பாதிக்கப்பட்டு பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 எனவே, கோயில் யானைகளை பெரிய அளவிலான, இயற்கை சூழலில் சுகாதாரமான இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அவற்றுடன் பெண் யானையும் உடனிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.



Tags : Tamil Nadu government , Temple elephants Keep in natural environment Cory Welfare Case: Government of Tamil Nadu Answer Court order
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...