×

மருத்துவத்துறையே மனரீதியான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது: முழு ஊரடங்கு அமல்படுத்துவது ஏன்?: முதல்வர் உருக்கம்

சென்னை: தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் மிகப்பெரிய மனரீதியான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனால் சிலர், முழு ஊரடங்கை ஏதோ விடுமுறை காலம் என்பதாக நினைத்து ஊர் சுற்றி  வருகிறார்கள். அதனால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த முடிவை அரசு எடுக்க வேண்டியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில்  முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான முழு ஊரடங்கு முடிய இருக்கிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கும் போது பொதுமக்களின் நன்மைக்காக சில தளர்வுகளை நாம் அறிவிக்கிறோம். ஆனால் அந்த தளர்வுகளை பயன்படுத்தி  அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவதும் சிலருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இப்படி வருபவர்களை அறிவுரை சொல்லி அனுப்பி வையுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டோம். அத்தகைய அன்பான அறிவுரைகளையும் சிலர் கேட்பதாக  தெரியவில்லை. முழு ஊரடங்கை சிலர், ஏதோ விடுமுறை காலம் என்பதாக நினைத்து ஊர் சுற்றி வருகிறார்கள். ‘கொரோனாவை வாங்கிக் கொள்ளவும் மாட்டேன் – கொரோனாவை அடுத்தவருக்கு கொடுக்கவும் மாட்டேன்’ என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டும் தான் இந்த நோய் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கடந்த  ஓராண்டு காலத்தில் விலைமதிப்பில்லாத மனித உயிர்களை இழந்துள்ளோம். இதனால் எத்தனையோ குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகி உள்ளது. இத்தகைய இழப்புகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். கடந்த  ஓராண்டு காலத்தில் நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் அடைந்துள்ள துன்பங்கள் அளவில்லாதது. ஏராளமான மருத்துவர்களை நாம் இழந்துள்ளோம். மருத்துவத்துறையே மிகப்பெரிய மனரீதியான நெருக்கடிக்கு  உள்ளாகி இருக்கிறது. தங்களது உயிரை பற்றி கவலைப்படாமல் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு இதற்கு மேலும் சுமையை, அழுத்தத்தை கொடுக்க முடியாது.  கொரோனா காரணமான மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பவர்கள் பள்ளி – கல்லூரி மாணவ, மாணவியர்கள். அவர்களுக்கு விடுமுறை என்பது மகிழ்ச்சிக்குரிய காலமாக இருந்தது, இப்போது மிகப்பெரிய துன்பம் தருவதாக மாறிவிட்டது.  மன அழுத்தம் கொண்டவர்களாக அவர்கள் மாறிவிடக் கூடும். இன்னும் எத்தனை மாதங்கள் பள்ளி, கல்லூரிகளை மூடி வைத்திருக்க முடியும்? அவர்களுக்கு விரைவில் கல்வியையும் எதிர் காலத்தையும் உருவாக்கித் தந்தாக வேண்டும்.  எனவே இந்த சூழ்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த முடிவை அரசு எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்….

The post மருத்துவத்துறையே மனரீதியான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது: முழு ஊரடங்கு அமல்படுத்துவது ஏன்?: முதல்வர் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Urukum ,Chennai ,Tamil Nadu ,Urukkam ,Dinakaran ,
× RELATED நான் சிறை சென்றாலும் ஜனநாயகம்...