×

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு : மலை பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.அதன்படி,  இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இம்மாவட்ட மலை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் மற்ற மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன், லேசான மழை பெய்யும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இதேபோல் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக வரும் 26ம் தேதி வரை வங்கக்கடல் பகுதியான தமிழக கடலோரம், ஆந்திர கடலோரம் மற்றும் தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.  அதேபோல், அரபிக்கடல் பகுதியான கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு, மத்திய மேற்கு, வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.


இவ்வாறு அதில் கூறப்படுள்ளது.

Tags : Nilagiri ,Kowai , புவியரசன்
× RELATED நீலகிரியில் மழை குறைந்ததால் மைக்ரோ...