×

அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: பிடிஓ பேச்சுவார்த்தை

ஆரணி: ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில், தொடர் மழை காரணமாக பல்வேறு தெருக்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஊராட்சியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், குடிநீர் முறையாக விநியோகம் செய்ய வேண்டும், பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என  வலியுறுத்தி அப்பகுதி வார்டு கவுன்சிலர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இரும்பேடு கூட்ரோடு அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, பிடிஓ சீனிவாசன், டிஎஸ்பி கோட்டீஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் தரணி வெங்கட்ராமன் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிடிஓ சீனிவாசன், அடிப்படை வசதிகள் தேவை குறித்து ஊராட்சி மன்ற தலைவர், வார்டு கவுன்சிலர்கள் என யாரிடமும் புகார் தெரிவிக்காமல் திடீரென சாலை மறியல் செய்வது தவறு. எந்த பிரச்னை என்றாலும் முறையாக புகார் செய்யுங்கள். இதுபோன்ற போராட்டங்களை தவிருங்கள் என கேட்டுக்கொண்டார்.  மேலும், இரும்பேடு ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஒரு வாரத்திற்குள் செய்து தருவதாக தெரிவித்தார். அதன்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, பிடிஓ சீனிவாசன் தலைமையில், இரும்பேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பிடிஓ, ஊராட்சியில் அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகளை செய்ய தலைவருக்கு வார்டு கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், ஊராட்சியில் சேதடைந்துள்ள சாலைகள் சீரமைப்பு மற்றும் கல்வெர்டுகள் அமைக்கும் பணிகள் 2 நாட்களில் தொடங்கப்படும். அதேபோல், குடிநீர் பிரச்னை மற்றும் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனே சீரமைக்குமாறு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட இரும்பேடு ஊராட்சியை சேர்ந்த 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : Basic facilities, public, road block
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...