அதிமுக ஆட்சியில் டெண்டரில் முறைகேடு மாநகராட்சி, நகராட்சி பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை:  தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி பணிகளுக்கான டெண்டரில்  முறைகேடுகள் இருந்தால் நிச்சயம் டெண்டர் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை  எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். இதுகுறித்து நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:  கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் நடைபெறும் பணிகளை பற்றி ஆய்வு செய்தேன். சென்னை மாநகராட்சியில் ரூ.120 கோடி டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகம் முழுவதும், டெண்டரில் முறைகேடுகள் இருந்தால் நிச்சயம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

துறை வாரியாக என்னென்ன புகார் வந்துள்ளது என்று வெளிப்படையாக கூற முடியாது. அப்படி கூறினால், அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். நடவடிக்கை எடுக்கும்போது வெளிப்படைய தெரிவிக்கப்படும். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பணம் இல்லாமல் ரூ.1000 கோடிக்கு சாலைகள் போடுவதாக சொல்லி இருந்தார்கள். அதை வரிசைபடுத்தி, எந்த பணிகள் முக்கியம் என்பதை கண்டறிந்து பணத்தை தயார் செய்து அந்த வேலைகள் செய்யப்படும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கோவையில், வெள்ளலூர் பேருந்து நிலையம் ரூ.168 கோடி செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மாநகராட்சி, நகராட்சி உதயமாகும்

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள்  இருக்கிறது. இதில் 80 லட்சம் பேர் இருக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு  மாநகராட்சியிலும் எவ்வளவு வட்டங்கள் இருக்கிறது, அந்த வட்டங்களில் சம அளவு வாக்குகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மத்திய தேர்தல் ஆணையம், ஒரு  சட்டமன்றம் என்றால் 1,80,000 முதல் 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர் வரை  இருக்கலாம். சில சட்டமன்றத்தில் 4 லட்சம் வாக்காளர்கள்  கூட இருந்தார்கள். அதுபோல மாநகராட்சி வார்டில் 9 ஆயிரத்தில் இருந்து 10  ஆயிரம் வாக்குகள் இருக்க வேண்டும். ஊருக்கு தகுந்த மாதிரி பிரித்துக்  கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில், புதிய  மாநகராட்சி, நகராட்சி உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்  புதிதாக எத்தனை மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும் என்பதை  முதல்வர்தான் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சிங்கார சென்னை 2.0 திட்டம்

சிங்கார சென்னை 2.0  என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி இருக்கிறார். அதன் முதல்  பணிதான் சென்னையில் உள்ள ஆறுகளை சீரமைப்பது. 2வது, சாக்கடை நீரை முழுமையாக  சுத்தப்படுத்தி கொசு இல்லாத அளவுக்கு செய்வது. அடுத்து, ஜல்ஜீவன்  திட்டத்தில், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு கொடுப்பது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Related Stories:

>