முதல்வர் எடியூரப்பாவை மாற்றுவதா?: லிங்காயத்து மடாதிபதிகள் பாஜ.வுக்கு எச்சரிக்கை: காங்கிரஸ் தலைவர்களும் ஆதரவு

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றக்கூடாது என்று பாஜ மேலிடத்திற்கு பல்வேறு  மடாதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா மாற்றப்படுவார் என்ற கருத்து  கடந்த 2 மாதங்களாக நிலவி வருகிறது. கடந்த 15ம் தேதி டெல்லியில்  பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை எடியூரப்பா சந்தித்து பேசினார்.  அந்த சந்திப்பின் போது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி நட்டா கூறியதாக  தகவல் வெளியானது. இந்நிலையில்,  வீரசைவ லிங்காயத்து மடங்களை சேர்ந்த பல்வேறு  மடாதிபதிகள், எடியூரப்பாவுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளனர்.  

மாநில முதல்வராக இருந்த வீரேந்திர  பாட்டீலை பதவியில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த வீரசைவ லிங்காயத்து  வகுப்பினர் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து விட்டனர். தற்போது, எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால்,  பாஜ.வுக்கும் அதே நிலை ஏற்படும் என்று மடாதிபதிகள் பகிரங்கமாக எச்சரிக்கை விட்டுள்ளனர். மேலும், எடியூரப்பாவை சந்தித்தும் அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

எடியூரப்பாவை நீக்கினால் 2023ல் நடக்கும் கர்நாடக சட்டபேரவை தேர்தலில் பாஜ படுதோல்வி சந்திக்கும்  என்று பகிரங்கமாக பாஜ தலைமைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.  இதே போன்று காங்கிரஸ் தலைவர்கள் சிவசங்கரப்பா,  காங்கிரஸ் எம்எல்ஏ எம்.பி.பாட்டீல்  காங்கிரஸ்  மூத்த தலைவர் எஸ்.ஆர்,பாட்டீலும் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: