×

நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்வெளி சென்று திரும்பினார் பெசோஸ்

வான் ஹார்ன்: மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதில் தனியார் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதில், இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சமீபத்தில் ரிச்சர்ட் பிரான்சன், இந்திய வம்சாவளி சிரிஷா உட்பட தனது குழுவினருடன் யூனிட்டி 22 விண்கலத்தின் மூலம் வெற்றிகரமாக விண்வெளி சென்று திரும்பினார். இந்நிலையில், ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் முதல் முறையாக மனிதர்களை அனுப்பி விண்வெளி பயண சோதனையை நடத்த நேற்று திட்டமிட்டிருந்தது. அதன்படி, அமேசான் நிறுவனர் பெசோஸ், அவரது சகோதரர் மார்க் பெசோஸ் மற்றும் 18 வயது இளைஞர், 82 வயது முன்னாள் பெண் விமானி என 4 பேர் கொண்ட குழுவினர்  பயணத்திற்கு தயாராகினர். மேற்கு டெக்சாஸ் மாகாணத்தின் ஏவு தளத்தில் இருந்து இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் பெசோஸ் குழுவினர் விண்வெளிக்கு புறப்பட்டனர்.

இந்த ராக்கெட் பூமியிலிருந்து 106 கிமீ உயரத்திற்கு பறந்த நிலையில், அதன் முனையில் இணைக்கப்பட்ட கேப்ஸ்யூல் தனியாக பிரிந்து விண்வெளிக்கு பயணித்தது. இந்த கேப்ஸ்யூலில் பெசோஸ் குழுவினர் அமர்ந்திருந்தனர். மின்னல் வேகத்தில் பறந்த கேப்ஸ்யூல், அடுத்த 4வது நிமிடத்தில் புவி ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்குள் நுழைந்தது. இதனால், கேப்ஸ்யூலில் பெசோஸ் குழுவினர் ஈர்ப்பு விசையின்றி காற்றில் மிதந்தனர். அதைத் தொடர்ந்து கேப்ஸ்யூல் தானாக பூமியை நோக்கி திரும்பியது. அதிலிருந்த பாராசூட் மூலம் கேப்ஸ்யூல் பத்திரமாக தரை இறங்கியது. 10 நிமிடத்தில் பெசோஸ் குழுவினர் விண்வெளி சென்று திரும்பினர். இதன் மூலம் தன் வாழ்நாள் கனவு நனவானதாக கூறிய பெசோஸ், இதுவே தன் வாழ்நாளின் பொன்னாள் என பெருமிதம் அடைந்தார்.

விமானி இன்றி பயணிக்கலாம்
* பிரான்சினின் யூனிட்டி விண்கலத்தை இயக்க பயிற்சி பெற்ற 2 விமானிகள் தேவை. ஆனால், பெசோசின் விண்வெளி பயணத்திற்கு எந்த விமானியின் தயவும் தேவையில்லை.
* பெசோசின் இந்த பயணத்தில், விண்வெளிக்குச் செல்லும் அதிக வயதான நபர், மிகக் குறைந்த நபர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 18 வயது இளைஞர் நெதர்லாந்தின் ஆலிவர் டேமன், ரூ.200 கோடி கொடுத்து ஏலத்தில் வெற்றி பெற்றார். இவரும், முன்னாள் பெண் விமானியான வாலி பங்க் ஆகியோரும் விண்வெளிக்கு சென்று சாதித்துள்ளனர்.

Tags : Bezos , New Shepherd Rocket, Bezos
× RELATED ஜெப் பெசோசுக்கு முதல் பின்னடைவு