×

நீர்நிலையில் செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்ட விவகாரம் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நீர் நிலையை மீட்டு பாதுகாக்க முடியும்: ஐஐடி குழு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  நீர்நிலையில் செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்ட விவகாரத்தில், எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நீர்நிலையை மீட்டு பாதுகாக்க முடியும், என்பது குறித்து ஐஐடி குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், செம்மஞ்சேரியில் புதிதாக  காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம்  தாமரைக்கேணி என்ற நீர்நிலையாகும். இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறவில்லை. எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல்நிலைய கட்டிடத்தை அகற்றி, நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஐடியின் 2 பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி ஐஐடி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன் மற்றும் சவுமேந்திரர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழு மேற்கண்ட பகுதியை ஆய்வு செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஐடி குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலை இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. காவல் நிலையத்தை மட்டும் இடித்துவிட்டால் பெரிய மாற்றம் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 அறிக்கையை பார்த்த நீதிபதிகள், காவல் நிலத்தை மட்டும் இடித்தால் பிரச்னை முடிந்துவிடாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட நீர் நிலையில் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால், அதை மீட்டு பாதுகாக்க முடியும் என்பது குறித்து ஐஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் வராமல் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : Chemmancheri Police Station ,IIT , Water Resources, Chemmancheri Police Station, IIT Committee Report, high court Order
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ்...