×

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா!: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்ற ஷேர் பகதூர் தியூபா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். நேபாளத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரப்போட்டி காரணமாக உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதனால் பிரதமராக இருந்த கே.பி.ஷர்மா ஒலி ஆட்சியை இழந்தார். இரண்டாவது முறை அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. எனவே அவரது பரிந்துரையின் பேரில் அதிபர் பித்யா தேவி பண்டாரி கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்தார்.

இது தொடர்பான வழக்கில் நேபாள உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபா, கடந்த 13ம் தேதி இரவு பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில், புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மொத்தம் 249 உறுப்பினர்கள் பங்கேற்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க 136 வாக்குகள் தேவை என்ற நிலையில் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் தியூபா வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தார். இதனையொட்டி நேபாள பிரதமர் தியூபாவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனைத்து துறைகளிலும் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள நேபாள பிரதமர், இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்பட ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : Nepal ,Sher Bahadur Tuba ,Narendra Modi , Confidence vote, Nepal's Prime Minister Sher Bahadur Tuba
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...