×

அன்னூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை: வரத்து அதிகரிப்பால் விலை குறைவு

அன்னூர்: அன்னூர் ஆட்டுச்சந்தையில் நேற்று ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்து. அன்னூரில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆடு,​ கோழி சந்தை நேற்று அதிகாலை 5 மணி அளவில் துவங்கியது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, குன்னத்தூர், அவிநாசி, புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் விற்பனைக்காக கொண்டு வந்தனர். செம்மறிஆடு, வெள்ளாடு, குறும்பாடுகளை வாங்க கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகளும் வந்திருந்தனர். பக்ரீத் பண்டிகைக்கு 3 நாட்களே உள்ள நிலையில் குர்பானி ஆடுகளை வாங்க இஸ்லாமியர்கள் பலரும் சந்தைக்கு வந்தனர். இதனால் அதிகாலை முதலே சந்தையில் விற்பனை களை கட்டியது. ஆடுகள் வரத்து அதிகரிப்பால் 8 கிலோ குட்டி ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விலை போக வேண்டியது 5 ஆயிரத்திற்கே விலை போனது. 12 கிலோ கிடா ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனை ஆவதற்கு பதில் 8 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விலை போனது.

அதேபோல் ஆடி மாதம் கெடா வெட்டுபவர்கள் கருப்பு ஆடுகளை பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார்கள். அதனால் அதன் விலை மட்டும் சற்று கூடுதலாக விற்கப்பட்டது. அதேபோல் கோழி சந்தையில் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.450க்கும், பெருவெடை கோழிகள் ரூ.550க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் இதில் பெருவெடைக் கோழிகளின் (கட்டுசேவல்) இறைச்சி சாதாரண கோழியை விட ருசி அதிகமாக இருக்கும் என்பதால், கோழிகளின் திறனை பரிசோதித்து சந்தையில் விற்பனை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கின்போது கோவையில் ஆட்டிறைச்சியின் விலை கிலோ ரூ.800 ஆக உயர்ந்தது. ஊரடங்கு தளர்விற்கு பின்னர் நகர் பகுதியில் கிலோ ரூ.760க்கும் கிராமப்பகுதிகளில் ரூ.650 முதல் ரூ.700 வரையிலும்  விற்பனையாகி வருகிறது.

சந்தை துவங்கி 3 மணி நேரத்தில் பெரும்பாலான ஆடுகள் விற்று தீர்ந்தன. சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்கால் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். வாழ்வாதாரம் இன்றி பொருளாதாரம் சிதைந்த நிலையில் அன்னூரில் ஊரடங்கு தளர்விற்கு பின்னர் 2வது வாரமாக சந்தை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகை நெருங்கியிருப்பதால் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வியாபாரம் நடைபெற்றது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை அதன் வரத்து அதிகமானதால் விலை சற்று குறைந்தது விற்பனை நடைபெற்றது. விவசாயிகள் தாங்கள் எதிர்பார்த்த​ விலையைவிட சற்று குறைவான விலைக்கே ஆடுகளை விற்பனை செய்துள்ளனர்’’ என்றனர்.

Tags : Annur , Goats for sale at Annur market for Rs 2 crore: Prices fall due to increase in supply
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...