2 டோஸ் போட்ட 1,000 பேரில் 0.06 பேர் மட்டுமே இறப்பு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்ட 1,000 பேரில் 0.06 பேர் மட்டுமே இறந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், ‘கொரோனா இரண்டாவது அலைகளின் போது ஏற்பட்ட இறப்புகளில் இரண்டு டோஸ் போட்டவர்களின் செயல்திறன் 95 சதவீதமாகவும், ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களின் செயல்திறன் 82 சதவீதமாகவும் இருந்தது. உருமாறிய டெல்டா வைரஸ் பரவிய நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், மக்கள் தடுப்பூசி போட்டு வருவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகையில், ‘கடுமையான தொற்று பரவல் மற்றும் இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசியின் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தமிழக காவல் துறையில் பணியாற்றும் சுமார் 1,17,524  பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் தடுப்பூசி போடாதவர்கள் 17,059 பேர், ஒரு டோஸ் பெற்றவர்கள் 32,792 பேர், இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் 67,673 பேர் உள்ளனர். தடுப்பூசி போடாதவர்களில் 20 பேர் இறந்துள்ளனர். ஒரு டோஸ் போட்டவர்கள் 7 பேரும், இரண்டு டோஸ் போட்ட 4 பேரும் இறந்துள்ளனர்.

ஆய்வின்படி கொரோனா காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாத கடந்த கால இறப்புகள் 1000க்கு 1.17 என்ற நிலையில் இருந்தன. ஆனால், தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்களில் 1,000க்கு 0.21 ஆகக் குறைந்தது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் இறப்பு விகிதம் 1,000க்கு 0.06 ஆக குறைந்துள்ளது. தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை, பயனளிக்கக் கூடியவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்’ என்றார்.

Related Stories:

>