×

கடந்த 2013ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில் புற்றுநோய் பாதிப்பு 24.5% அதிகரிப்பு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 2013ம் ஆண்டு முதல் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 24.5 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் 8% பேர் மகாராஷ்டிராவில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வாய், உணவுக்குழாய், நுரையீரல், எலும்பு மஜ்ஜை மற்றும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக புகையிலை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு புற்றுநோய் அதிகளவில் கண்டறியப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் தற்போது 14.61 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 2013ம் ஆண்டு 97,759 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2022ல் அந்த எண்ணிக்கை 1,21,717 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவேடு தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் மட்டும் 8% பேர் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

2022ல் அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 2,10,958 பேரும், அதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 1,21,717 பேரும் மற்றும் மேற்கு வங்கத்தில் 1,13,581 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் சத்ய பால் சிங் பாகேல் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். 100ல் 10பேர் மரபணு ரீதியாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் மற்றவர்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சத்தான உணவுகளை உட்கொள்ளாதது போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பது கவலைக்குரிய ஒன்று. புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது. இந்தியாவின் மொத்த பாதிப்பில் ஆண்கள் 50% பேரும் பெண்கள் 20% பேரும் புகை பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். புகைபிடித்தல், புகையிலை உள்ள பொருட்களை உட்கொள்வது, மது அருந்துதல் மற்றும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் போன்றவை வாய், தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்றில் புற்றுநோயை உண்டாக்கும். எனவே, நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* புகை பழக்கத்திற்கு
அடிமையானவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது. இந்தியாவின் மொத்த பாதிப்பில் ஆண்கள் 50% பேரும் பெண்கள் 20% பேரும் புகை பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

The post கடந்த 2013ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில் புற்றுநோய் பாதிப்பு 24.5% அதிகரிப்பு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Medical Research Council of India ,Mumbai ,National Cancer Records of the Medical Research Council of India ,India ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...