×

குழந்தைகளின் படைப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையிலான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அறிவியல் நகரத்தில் உள்ளன: பிரதமர் மோடி பேச்சு!!

அகமதாபாத் : குஜராத்தில் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் எந்திரவியல் காட்சியகங்கள் மற்றும் இயற்கை பூங்காவையும் அவர் திறந்து வைத்தார். காந்திநகர் கேப்பிடல்-வாரணாசி அதிவேக வாரந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் காந்திநகர் கேப்பிடல்-வரேத்தா இடையேயான மின்சார ரயில் சேவைகளையும் பிரதமர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கான்கிரீட் கட்டுமானம் மட்டுமல்லாமல் தனது சொந்த குணநலனுடன் கூடிய உள்கட்டமைப்பை உருவாக்குவதே நாட்டின் இன்றைய லட்சியமாகும் என்றார். குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் இயற்கை வளர்ச்சியோடு கற்றல் மற்றும் படைப்புத்திறனுக்கும் இடம் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பொழுதுபோக்கு மற்றும் படைப்புத்திறனை ஒருங்கிணைக்கும் விதமாக அறிவியல் நகரம் அமைந்துள்ளதாக அவர் கூறினார். குழந்தைகளின் படைப்புத்திறனை ஊக்கப்படுத்தும் பொழுதுபோக்கு வசதிகள் இங்குள்ளன என்று அவர் கூறினார்.

அறிவியல் நகரத்தில் நிறுவப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள் காட்சியகம் இன்னும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். நமது நாட்டில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே முன்னணி நீர்வாழ் உயிரினங்களின் காட்சியகமாக இது உள்ளதாக அவர் கூறினார். உலகெங்கிலும் இருக்கும் நீர்வாழ் பல்லுயிர் தன்மையை ஒரே இடத்தில் காணக்கிடைப்பது பரவசமான அனுபவம் என்றார் அவர்.

எந்திரவியல் காட்சியகத்தில் ரோபோக்களுடன் உரையாடுவது கவர்ச்சிகரமான அம்சமாக மட்டுமே இல்லாமல் ரோபோடிக்ஸ் துறையில் நமது இளைஞர்கள் பணிபுரிவதற்கான ஊக்கத்தையும் ஆர்வத்தையும் அவர்களது மனங்களில் விதைக்கும் என்று பிரதமர் கூறினார்.

21-ம் நூற்றாண்டுக்கான இந்தியாவின் தேவைகளை இருபதாம் நூற்றாண்டு வழிமுறைகளின் மூலம் பூர்த்தி செய்ய முடியாது என்று கூறிய பிரதமர், இதன் காரணமாக ரயில்வேயில் புதிய சீர்திருத்தம் தேவைப்பட்டதாக கூறினார். ரயில்வேயை சேவையாக மட்டுமில்லாமல் சொத்தாகவும்  மேம்படுத்தியுள்ளோம் என்றும் இதன் விளைவுகளை தற்போது காணலாம் என்றும் அவர் கூறினார். முக்கிய ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் கூட வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார். மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அகலப் பாதையில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்குகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.  

இந்தியா போன்ற பெரிய நாட்டில் ரயில்வே ஆற்றிவரும் பங்கு குறித்து பிரதமர் குறிப்பிட்டார். வளர்ச்சியின் புதிய பரிமாணங்கள் மற்றும் வசதியின் புதிய பரிமாணங்களை ரயில்வே கொண்டு வருவதாக அவர் கூறினார். கடந்த சில வருடங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக வடகிழக்கு பகுதியின் தலைநகரங்களுக்கு முதன்முறையாக ரயில்கள் சென்றடைவதாக அவர் குறிப்பிட்டார். வாத் நகரும் இன்றைக்கு இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இணைந்துள்ளது. புதிய நிலையம் உண்மையிலேயே கவர்ச்சிகரமாக இருக்கிறது. வாத் நகர் ரயில் நிலையத்துடன் எனக்கு பல்வேறு நினைவலைகள்  உள்ளன. புதிய அகல பாதை தடத்தை அமைத்ததன் மூலம் வாத் நகர்-மோதேரா-பதான் பாரம்பரிய பிரிவுக்கு தற்போது சிறப்பான ரயில் சேவை கிடைக்கும் என்று பிரதமர் கூறினார்.

 நவீனமயம் மற்றும் ஏழைகள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நலன் ஆகிய இரண்டு தடங்களில் மட்டுமே புதிய இந்தியாவுக்கான வளர்ச்சி வாகனம் முன்னேறி செல்ல முடியும் என்றும் பிரதமர் கூறினார்.


Tags : Modi , பிரதமர் திரு நரேந்திர மோடி
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...