×

20 சார்பதிவாளர் அலுவலகங்களில் சட்ட விரோதமாக பத்திரப்பதிவு கண்டுபிடிப்பு அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்தால் செல்லாது: பதிவுத்துறை ஐஜி அதிரடி உத்தரவு

சென்னை: 20 சார்பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை சட்ட விரோதமாக பதிவு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்தால் செல்லாது என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.  தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை கடந்த 2017ல் மே 4ம் தேதி அறிவித்தது. ஆனால், வரன்முறை கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி 14 லட்சம் மனைகளில் 4 லட்சம் மனைகள் மட்டுமே வரன்முறை செய்யப்பட்டன. தொடர்ந்து வரன்முறை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டன. ஆனாலும், யாரும் வரன்முறை செய்ய முன்வரவில்லை. அதே நேரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் இல்லாத மனைகளை சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.


 இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அங்கீகாரம் இல்லாத மனை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் மாவட்ட தணிக்கை பதிவாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.. இந்த ஆய்வில் பல சார்பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை பதிவு செய்து இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி ஆம்பூர், காட்பாடி, திருப்பத்தூர் ஆகிய அலுவலகங்களில் 529 பத்திரங்களும், திண்டிவனம் 2ம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 3 பத்திரங்களும், திருமங்கலம் அலுவலகத்தில் 21 வழக்குகள் இருப்பதும், குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு ஆவணமும், ராஜபாளையம் அலுவலகத்தில் 6 ஆவணங்களும், பெரியகுளம் பதிவு மாவட்டத்தில் 5 அலுவலகங்களில் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 9 சென்ட் நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திருப்புவனம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 3 ஆவணங்களும், ராமநாதபுரம் பதிவு மாவட்டத்தில் சாயல்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 8 ஆவணங்களும், ராஜசிங்கமங்களம் அலுவலகத்தில் 7 ஆவணங்களும், வடமதுரை அலுவலகத்தில் 21 ஆவணங்களும், ஒட்டன்சத்திரத்தில் 5 ஆணவங்களும், மேலூர் அலுவலகத்தில் 9 ஆவணங்களும், கருங்கல்குடி அலுவலகத்தில் 6 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனை பிரிவுகள் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்தல் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. எனவே, ஆவணதாரருக்கு உரிமை மாற்றம் ஏற்படாத ஆவணத்தை வீணாக பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி அனைத்து சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


மாவட்ட பதிவாளர்கள் ஆய்வு செய்யாத சார்பதிவாளர் அலுவலகங்கள்

அங்கீகாரம் இல்லாத மனை தொடர்பாக மாவட்ட தணிக்கை பதிவாளர் ஆய்வு செய்ய 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டன. ஆனால், மாவட்ட பதிவாளர்கள் அனைத்து அலுவலகங்களில் ஆய்வு செய்யவில்லை. மாறாக, திருவண்ணாமலை பதிவு மாவட்டத்தில் போளூர், சேத்துப்பட்டு செங்கம், கடலூர் பதிவு மாவட்டத்தில் பன்ருட்டி, கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டத்தில் 4 அலுவலகங்களிலும், திண்டிவனம் பதிவு மாவட்டத்தில் வானூர், மரக்காணம், செஞ்சி, அவலூர்பேட்டை, மதுரை பதிவு மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு, ராமநாதபுரம் பதிவு மாவட்டம் வெளிப்பட்டினம் உள்ளிட்ட பல அலுவலகங்களில் ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : 20 Delegate, Offices, Illegal, Deed
× RELATED மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த...